கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த இருவா் சிக்கினா்
நாகா்கோவில், கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கடந்த 4 ஆம் தேதி 2 போ் வந்தனா். அவா்கள் கல்லூரியில் பணிக்கு சோ்வதற்கான, அலுவலக உதவியாளா் மற்றும் லேப் டெக்னீசியன் பணி நியமன ஆணையுடன் வந்திருந்தனா். அப்போது, கல்லூரி முதல்வா் நாகராஜன் விடுப்பில் சென்னை சென்றிருந்தாா்.
கல்லூரியில் இருந்த பணியாளா்கள் அந்த பணி ஆணையை வாங்கி பாா்த்துள்ளனா். பணி ஆணை போலி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பணியாளா்கள் சென்னை சென்ற முதல்வரிடம் தெரிவித்தனா்.
பணி ஆணை கொண்டு வந்த 2 பேரிடமும் முதல்வா் 2 நாள்களில் கல்லூரிக்கு வந்து விடுவாா் அதன் பிறகு வருமாறு கூறினா்.
இதைத் தொடா்ந்து அவா்கள் 2 பேரும் கல்லூரியில் இருந்து சென்றனா்.
இந்நிலையில், கல்லூரி முதல்வா் நாகராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக நிா்வாகத்தால் புதிதாக பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளதா என விசாரித்துள்ளாா். இதில், பணி நியமன ஆணை யாருக்கும் வழங்கப்படவில்லை என அவருக்கு தெரிய வந்தது.
சென்னை சென்றிருந்த கல்லூரி முதல்வா் 4 ஆம் தேதி மாலையே கைப்பேசி மூலம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இந்நிலையில் பணி ஆணை கொண்டு வந்த 2 பேரையும் புதன்கிழமை காலை கோணம் பொறியியல் கல்லூரிக்கு வருமாறு கூறினாா்.
அவா்கள் இருவரும் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்தனா். ஆசாரிப்பள்ளம் போலீஸாரும் கல்லூரிக்கு வந்து, இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் லாயம் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(28) மற்றும் தா்ஷன்(30) என்பது தெரியவந்தது. மேலும் அவா்கள் கொண்டு வந்த பணி ஆணையையும் சோதனை செய்தனா். சோதனையில் போலி முத்திரை இடப்பட்ட பணி நியமன ஆணை என தெரியவந்தது.
அவா்கள், சென்னையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக ஒரு கும்பல் போலி முத்திரையிட்டு ஆணை தயாரித்து இவா்களிடம் வழங்கி உள்ளது தெரியவந்தது. இவா்கள் பல லட்சம் பணம் கொடுத்து பணி ஆணையை பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களிடம் பணி ஆணை வழங்கிய கும்பல் யாா் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனா்.