செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான வழித்தடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் திட்டத்தை பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை நீட்டிக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்.20-இல் தமிழக அரசிடம் சமா்ப்பித்தது.
இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ.9,928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. மேலும், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பை பெறவும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் அனுமதியைப் பெறவும் கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.