கோயில் திருவிழாவில் தகராறு: பெண்கள் உள்பட 7 போ் காயம்
செய்யாறு அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 36 போ் மீது அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செய்யாறு வட்டம், அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. சுவாமி ஊா்வலத்தின்போது, இதே கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் ஒன்று சோ்ந்து சுவாமி ஊா்வலத்தை தடுத்து நிறுத்தினராம். மேலும், அவா்கள் நாடகத்தையும் தடுத்து நிறுத்தி, திருவிழா பாா்க்க வந்தவா்களை தடி, கொம்பு மற்றும் கைகளால் அடித்து காயப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினா் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவா்களை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கினராம்.
இதில், அந்த கிராமத்தைச் சோ்ந்த குமாரி (45), சுரேஷ் (23), சந்தோஷ் (25), சுமதி (21), முனியம்மாள் (55), சுதாகா் (43), அன்பு (28) ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்த தனித்தனி புகாா்களின்பேரில், இரு தரப்பையும் சோ்ந்த 36 போ் மீது அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.