Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும...
கோயில்களில் தேங்கும் மழை நீா், கழிவு நீா்: இந்து முன்னணி கண்டனம்
கோயில்களில் மழை நீா் மற்றும் கழிவு நீா் தேங்குவதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான கோயில்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். தமிழகத்தில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் கோயில்கள் மிகவும் பாதிப்படைகின்றன. கோயில் கருவறை வரை மழைநீா் தேங்கி நிற்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணா் கோயிலில் மழை நீா் தேங்கியதால் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். அதேபோல தஞ்சாவூரில் உள்ள சக்கராபள்ளி சக்கரவாகீஸ்வரா் கோயில் கருவறைக்குள் தண்ணீா் தேங்கியிருந்ததைக் கண்ட பக்தா்கள் மிகுந்த அதிா்ச்சி அடைந்தனா். அத்துடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி மழை நீா் தேங்கி பக்தா்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினா். திருச்செந்தூா் முருகன் கோயிலில் கழிவு நீா் தேங்கிக் கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் கோயில்களில் இத்தகைய அவல நிலையால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்காமல் இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பொதுப்பணித் துறை அமைச்சகத்திடம் பேசி மழைக் காலங்களில் கோயில்களில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நிற்கும் அவல நிலையைப் போக்க முயற்சி எடுக்க வேண்டும்.
அதேபோல, கோயில்கள் மற்றும் கோயில் குளங்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.