கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு
கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இருந்து வெளியேறி விவசாய தோட்டங்களுக்கு வருவது வழக்கம்.

அப்போது யானை – மனித முரண்கள் அதிகளவு நடக்கின்றன. இதன் காரணமாக யானைகள், மனிதர்கள் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் அருகே உள்ள சோலைப்படுகை பகுதியில் நிர்மலா என்பவரின் தோட்டத்துக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் சாடிவயல் ஒரு ஆண் யானை சென்றுள்ளது. சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக யானை அங்கிருந்த 25 அடி கிணறில் தவறி விழுந்துள்ளது.

யானையின் பிளறல் சத்தம் கேட்டு, வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, யானை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ஜேசிபி உதவியுடன் யானையின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும். அந்த யானையுடன் சேர்த்து மொத்தம் 3 யானைகள் இந்தப் பகுதியில் சுற்றி வந்தன. இன்று அதிகாலையும் 3 யானைகள் ஒன்றாகவே இருந்தன.

மற்ற 2 யானைகள் காட்டுக்குள் செல்ல ஒரு ஆண் யானை மட்டும் தோட்டத்திலேயே இருந்துள்ளது. அந்த யானை காட்டுக்கு செல்லும்போது தான் சம்பவம் நடைபெற்றுள்ளது.” என்றனர்.