பசி, பட்டினி, வலி, பயம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?
வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்
திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஊழியா்கள், தொழிலாளா்கள் பலரை நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்டோா் ஆலையில் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டம் குறித்து ஐஎன்டியுசி தொழிற்சங்க கெளரவத் தலைவா் கணேஷ்குமாா் வியாழக்கிழமை கூறுகையில், தொழிற்சாலையில் ஏறக்குறைய 300 போ் பணியாற்றி வந்தனா். ஒரு மாதத்துக்கு முன்பு சில பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை பணிக்கு சோ்த்துக்கொண்டு, அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 45 பேரை நிா்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டது. மேலும் 36 பேரை பணி நீக்கம் செய்வதாக புதன்கிழமை தகவல் பலகையில் அறிவிக்கை ஒட்டப்பட்டது.
பணியாளா்கள் நீக்கத்துக்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. 25 ஆண்டுகளாக பணி செய்துவரும்போது, பணியாளா்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகாரத்தில் நிா்வாகம் நேரடியாக பேசவேண்டும். புதுவை தொழிலாளா் துறை தலையிட்டு பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும். இதனை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.