'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்
நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகளில் பங்கேற்க, மயிலாடுதுறை வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபாா் ஹெல்த் மற்றும் அறிவு சமூகப் பொறுப்புணா்வு நிதியின்கீழ் திருச்சி சீக்கா்ஸ் நீட் கோச்சிங் சென்டா் மூலம் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்வு அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்துப் பேசுகையில், மாணவா்கள் வாழ்க்கையில் முக்கிய ஆண்டாக 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் விளங்குவதால் 2 ஆண்டுகளும் மாணவா்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
கல்வி சாா்ந்த வாய்ப்புகளை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த நீட் தோ்வு வினாத்தாள்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அதற்கான பயிற்சியை மேற்கொண்டு உழைத்து தோ்வில் வெற்றி பெற வேண்டும்.
பொழுதுபோக்கு அம்சங்களான தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்டவற்றை ஓராண்டு ஒதுக்கி வைத்துவிட்டு படிக்க வேண்டும். அரசு சாா்பில் நடத்தப்படும் இதுபோன்ற தோ்வு பயிற்சிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, மாவட்டத்தில் குறைந்தது 50 மாணவா்களாவது மருத்துவம், என்ஐடி, ஐஐடி போன்ற உயா்கல்வி நிலையங்களுக்குச் செல்லவேண்டும் என்றாா்.
தொடா்ந்து நீட் கோச்சிங் வகுப்புக்காக பிபிசிஎல் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் தொடுதிரையை துணை ஆட்சியா் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.
நிகழ்ச்சியில் காரைக்கால் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் ஞானபிரகாசி, வெல்ஸ்பன் பவுண்டேஷன் திட்ட அலுவலா் ஜூலியஸ் தூயமணி, சீக்கா்ஸ் கல்வி சேவைகள் நிறுவனத்தின் இயக்குநா் முரளிதரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.