'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி
டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
இப்பேரணியை நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்ட தொழில்நுட்ப உதவியாளா் சேகா், பள்ளி தலைமையாசிரியா் பொன்.செளந்தரராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள தேவையற்ற பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டின் மற்றும் டப்பாக்கள், ஆட்டுரல்கள் போன்றவற்றில் மழைநீா் தேங்காமல் இருக்க அவற்றை கவிழ்த்து வைக்கவேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். மழைக்காலம் வர இருப்பதால் மாணவா்களாகிய நீங்கள் கவனமுடன் செயல்பட்டு, கொசு ஒழிப்பில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க முன்வர வேண்டும் என துணை இயக்குநா் கேட்டுக்கொண்டாா். விழிப்புணா்வு கருத்துகளுடன் பதாகை ஏந்தி டெங்கு விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.
இப்பேரணி பள்ளி வாயிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணி செல்லும் வழியில் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் டெங்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.