பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி
கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோதனை நடத்தினா்.
அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சோதனை நடத்தினா்.
மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இணையதள முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டறிவதற்காக இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், பொதுமக்களும், அலுவலகப் பணியாளா்களும் அச்சமடைந்தனா்.
கோவை விமான நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அண்மைக் காலமாக அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.