வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகள், கோயிலை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் கோயிலை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டம் அல்லது வன எல்லைகளில் காணப்படும் யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் லோயா் டிவிஷன் பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் கூட்டமாக நுழைந்த யானைகள், தொழிலாளா்கள் குடியிருப்பு சுவா்களை முட்டித் தள்ளின. மேலும், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலையும் முட்டித் தள்ளி உள்ளிருந்த பொருள்களை வெளியே இழுத்துப் போட்டு சேதப்படுத்தின.
தகவலறிந்த வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன.