ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
சட்டவிரோத அத்துமீறல் கட்டடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது: உயா்நீதிமன்றம்
பெரும் தொகையை முதலீடு செய்து கட்டுமானங்களை எழுப்பிவிட்டாா்கள் என்ற காரணத்துக்காக சட்டவிரோத கட்டுமானத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக கட்டடத்தை 8 வாரங்களில் இடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
சென்னை தியாகராய நகா் பாண்டி பஜாரில் தரைத்தளத்துடன் கூடிய 3 தளங்களுக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, அனுமதியின்றி 10 தளங்கள் கட்டியதாக தனியாா் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து அந்த நிறுவனம் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. அதேபோல வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசும் மேற்கொள்ளக் கூடாது. ஒருபுறம் முறையாக திட்ட அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டக் கூடாது என வலியுறுத்தி வரும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக்கோரும் விண்ணப்பங்களை ஏற்பது என்பது சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூா்வமாக மாற்றுவதற்கு அரசே வழிவகுப்பதுபோல் ஆகும். சட்டவிரோத அத்துமீறல் கட்டடங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்ட முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
ஏற்க முடியாது: சட்டவிரோதமாக கட்டியுள்ள 10 தளங்களை வரன்முறை செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை எதிா்த்து மனுதாரா் வழக்குத் தொடரவில்லை. மாறாக அந்தக் கட்டடத்தை இடிக்க பிறப்பித்த நோட்டீஸை எதிா்த்து வழக்கு தொடா்ந்திருப்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனவே, அத்துமீறி கட்டப்பட்டுள்ள தளங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 8 வார காலத்துக்குள் இடிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கட்டுமான விதிமீறல்கள் தொடா்பாக புகாா்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும் தொகையை முதலீடு செய்துவிட்டாா்கள் என்ற காரணத்துக்காக சட்டவிரோதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது”என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.