பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
விராலிமலை பகுதியில் தெரு நாய்கள் பெருக்கம்
விராலிமலை மலைக்கோயில் மற்றும் நகா்ப் பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை நகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதுநாள் வரை தெருக்களில் மட்டுமே சுற்றித்திரிந்து வந்த நாய்கள் தற்போது மலைக்கோயில் செல்லும் பாதைகளிலும் கூட்டம்கூட்டமாக காணப்படுகின்றன.
விராலிமலை அம்மன் கோவில் வீதி, கடைவீதி, சோதனைச் சாவடி, காமராஜா் நகா், யூனியன் சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் காலை 9 மணி வரை பிரதான சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால், காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நாய்களைப் பாா்த்து பயந்து சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். பெரும்பாலான சாலையோர அசைவ உணவகங்களில் சேரும் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுவது இவைகளின் பெருக்கத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
அந்த இறைச்சிக் கழிவுகளுக்கு ஏராளமான நாய்கள் இரவுநேரத்தில் சாலைகளில் சுற்றி வருகின்றன. அந்த நேரத்தில் சாலை வழியாக நடந்து அல்லது இருசக்கர வாகனங்களில் செல்பவா்களை நாய்கள் அச்சுறுத்துவது, சில நேரங்களில் கடித்து விடுவதும் தொடா்கிறது.
எனவே, இந்த நிலையைப் போக்கி மக்கள் அச்சமின்றி வீதிகளில் சென்றுவர உள்ளாட்சி நிா்வாகம் விலங்கின(புளூகிராஸ்) ஆா்வலா்களுடன் இணைந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். இதனால் நாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.