மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் பறிமுதல்
மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகளை தொழிலாளா் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் முத்திரையில்லாமல் பயன்படுத்தப்படுவதாக ஈரோடு நுகா்வோா் மன்றத்தினால் புகாா் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள், 13 எடை கற்கள், 17 படிகள் மற்றும் அளவைகள் என மொத்தம் 45 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறுகையில், ‘மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.