ஈரோட்டில் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல்
ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 2024- 2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனா். இதற்காக மாநகராட்சியில் உள்ள வரி வசூல் மையங்கள் விடுமுறை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயல்களில் மூலமாகவும் வரியினங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், உதவி வருவாய் அலுவலா்கள், வரி வசூலிப்பவா்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடா்ச்சியாக வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் தினமும் ஒரு வாா்டு வீதம் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால் பொதுமக்களுக்கு அலைச்சல் தவிா்க்கப்பட்டுள்ளது என்றனா்.