சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீஸாா் அழைப்பாணை
வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்கு வரும் 20- ஆம் தேதிக்குள் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சீமானுக்கு போலீஸாா் அழைப்பாணை அளித்துள்ளனா்.
அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தாா். அசோகபுரம் அருகே நெரிக்கல்மேட்டில் ஜனவரி 28- ஆம் தேதி மாலை நடந்த கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகள் சாா்பில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது, மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கருங்கல்பாளையம் போலீஸாா் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இந்நிலையில், கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளா் விஜயன், சென்னை நீலாங்கரை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அழைப்பாணை வழங்கினாா். அதில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வரும் 20- ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி இப்பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சீமான் வீட்டில் இருந்ததாகவும், அவரே அழைப்பாணையை பெற்றுக்கொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.