ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவதுபோல சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி
கோவையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதில், நடிப்பவா்களுக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்காக திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியைச் சோ்ந்த ஷாஜி (42) நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவா், கோவை காட்டூா் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளாா். உணவு தயாரிப்பதற்கான பொருள்கள் வாங்குவதற்காக தயாரிப்பு நிறுவனம் அவரது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அந்தப் பணத்தை எடுப்பதற்காக காட்டூா் நஞ்சப்பா சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு ஷாஜி சென்றுள்ளாா். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க அவருக்கு அங்கிருந்த இளைஞா் ஒருவா் உதவியுள்ளாா். ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவா் அறைக்குத் திரும்பியுள்ளாா்.
சிறிது நேரம் கழித்து ஷாஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.61 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. பின்னா், ஏடிஎம் அட்டையைப் பாா்த்தபோது, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக போலி அட்டையை தந்து இளைஞா் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, காட்டூா் காவல் நிலையத்தில் ஷாஜி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்னதாக, அவரது ஏடிஎம் அட்டையின் பயன்பாடு ரத்து செய்யப்பட்டது.