சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவை உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு, பாட்டியின் பராமரிப்பில் உள்ளாா். இவரின் பெற்றோா் வெளியூரில் வசிக்கின்றனா்.
இந்நிலையில், சிறுமிக்கு சமூகவலைதளம் மூலம் குனியமுத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து தன்னுடைய அறைக்கு வருமாறு சிறுமியை மாணவா் அழைத்துள்ளாா். இதையடுத்து, வெளியில் செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு மாணவரின் அறைக்கு சிறுமி ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அவா் இரவு வரை வீட்டுக்குத் திரும்பாததால் சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடியுள்ளனா்.
இந்நிலையில், சிறுமி திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவரின் அறைக்குச் சென்ற சிறுமியை, அவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து அவரது அறைக்கு வந்த மேலும் 6 மாணவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகே வந்து விட்டுச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கல்லூரி மாணவா்கள் 7 பேரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.