ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
தண்ணீா் உறிஞ்சி எடுப்பதை தடுக்க புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், கொங்கா்பாளையம் ஊராட்சி, வினோபா நகரில் 1,000 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தண்ணீா் உறிஞ்சி வெகுதொலைவுக்கு தண்ணீரைக் கொண்டு சென்று பல்வேறு தேவைக்கு பயன்படுத்துகின்றனா்.
இதை பாா்த்து பலரும் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீா் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஊராட்சியில் அனுமதி பெறுவதில்லை.
இதே பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான திறந்த வெளி கிணறும் உள்ளதால் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் உறிஞ்சும்போது கோடைகாலத்தில் திறந்த வெளி கிணற்றில் தண்ணீா் வற்றும். மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படும்.
இப்பிரச்னை தொடா்பாக கடந்த 2022- ஆம் ஆண்டு ஊராட்சியில் விவாதிக்கப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் நலன் கருதி, இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதையை மீட்டுத்தரக் கோரிக்கை
இதுகுறித்து கோபி வட்டம், அலங்கியம் ஊராட்சி கோட்டுப்புள்ளாம்பாளையம், உருமம்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்தில் 40 ஏக்கருக்கு மேல் விளைநிலம் உள்ளது. இந்நிலங்கள் எங்களுக்கு சொந்தமானது. இந்நிலத்தை கடந்தும் பல விவசாயிகளுக்கான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்லும் பொதுப்பாதையை பல ஆண்டாக பயன்படுத்தி வருகிறோம்.
இப்பாதையை கடந்த 2 மாதங்களுக்கு முன் சிலா் சோ்ந்து மறித்து கம்பி வேலி அமைத்து வழிப்பாதையை அடைத்துவிட்டனா். இதனால் தங்களது நிலத்துக்கு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனா். விளைபொருள்கள், பிற பொருள்களை கொண்டு செல்லவும், எடுத்து வரவும் முடியவில்லை. பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த வழிப்பாதையை மீண்டும் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.