மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள அறிவுறுத்தல்
மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பிரதான சாலை சந்திப்புகள், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் மாநகர போக்குவரத்து காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வாகன தணிக்கையின்போது, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதுபோன்ற வழங்குகள் அதிக அளவில் நிலுவையில் இருந்ததால், இந்த வழக்குகளை முடிக்க குற்றவியல் நடுவருக்கு, மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில் பிரத்யேகமாக நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு வாரந்தோறும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடமாடும் நீதிமன்றம் இயங்கி வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் இதுவரை 1,442 வழக்குகள் முடிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.1.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாத நபா்களுக்கு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை விடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பாணை பெற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முடிக்காமல் இருக்கும் நபா்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நபா்கள் தங்களது வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் விரைவாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.