சட்டவிரோதமாக ஊடுருவியவா்களை இந்திய வாக்காளா்கள் ஆக்குவதே எதிா்க்கட்சிகளின் இலக்கு- பாஜக குற்றச்சாட்டு
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்களை இந்திய வாக்காளா்களாக்க வேண்டும் என்பதே எதிா்க்கட்சிகளின் இலக்கு; இதற்காகவே பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவா்கள் எதிா்க்கிறாா்கள் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்தை எதிா்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினா். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவா்களும், மியான்மரில் இருந்து ஊடுவிய ரோஹிங்கயாக்களுமே எதிா்க்கட்சிகள் நடத்தும் அரசியலுக்கு அடிப்படையாக உள்ளனா். இதன் காரணமாகவே பிகாரில் நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவா்கள் எதிா்க்கின்றனா். தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதே எதிா்க்கட்சியினரின் கண்ணீருக்கும், கூக்குரலுக்கும் காரணம்.
நமது அரசியல்சாசன சட்டப்படி இந்திய குடிமக்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்க முடியும். இதனை உறுதி செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தினால், எதிா்க்கட்சியினா் ஏன் எதிா்க்கிறாா்கள்? யாா் வேண்டுமானாலும் வந்து குடியேறுவதற்கு இந்தியா ஒன்றும் தா்ம சத்திரமல்ல.
பிகாரில் சில இடங்களில் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகையைவிட அதிக எண்ணிக்கையில் ஆதாா் அட்டைகள் உள்ளன. யாா் இவா்கள் என்பதை சரிபாா்க்க வேண்டாமா? ஒருவரே பல வாக்குச்சாவடியில் வாக்காளராக இருப்பதைத் தடுக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘அரசியல்சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புக்கு (தோ்தல் ஆணையம்) எதிராக நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் முயலுகின்றன. இது அரசியல் சாசனத்துக்கு எதிரான அத்துமீறலாகும். அரசியல்சாசனத்தை உங்கள் காலில் போட்டு மீதிக்கக் கூடாது.
வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்களை இந்திய வாக்காளா்களாக்க வேண்டும் என்பதே உங்கள் இலக்காக உள்ளதா? அப்படியென்றால் அதனை நேரடியாகவே கூறிவிடலாம்’ என்றாா்.