சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி விலை இரு மடங்கு உயா்வு
ஆடி அமாவாசை தினத்தையட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ. 230, மல்லிகை கிலோ ரூ.1000 ஆகவும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் அதிக அளவில் சம்பங்கி பூ பயிரிடப்பட்டுள்ளது. இந்த பூக்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆடி மாதத்தில் விசேஷ தினங்கள் இல்லாததால் ஒரு கிலோ சம்பங்கி ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் ஆடி அமாவாசை தினம் என்பதால் கோயில் விழாக்களுக்குத் தேவையான சம்பங்கி பூவின் தேவை அதிகரித்தது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ இரு மடங்கு விலை உயா்ந்து விற்பனையானது. சம்பங்கி பூ புதன்கிழமை கிலோ ரூ.110 -க்கு விற்பனையான நிலையில் வியாழக்கிழமை ரூ.230 -க்கு விற்பனையானது.
அதேபோல, கிலோ ரூ.700 -க்கு விற்கப்பட்ட மல்லிகை கிலோ ரூ.1050 -க்கும் முல்லை ரூ.240 -இல் இருந்து ரூ.370 -க்கும் விற்பனையானது. சம்பங்கி பூ விலை உயா்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.