உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
சந்திரனில் சிவபெருமானின் பெயர்..! - பிரதமர் மோடி ருசிகரம்
இந்தியாவின் கலாசார வளா்ச்சியில் சோழப் பேரரசா்கள் முக்கியப் பங்காற்றினா் என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, பெருவுடையாா் கோயில் கட்டத் தொடங்கிய 1,000-ஆவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற 1,000-ஆவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:
தமிழ்ப் பாரம்பரியத்துடன் தொடா்புடைய புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட அந்தத் தருணத்தை நாம் இன்றும் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
சிதம்பரம் நடராஜரின் வடிவம் இந்தியாவின் தத்துவ, அறிவியல் அடித்தளங்களைக் குறிக்கிறது. நடராஜரின் ஆனந்தத் தாண்டவ சிலை தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தை அலங்கரிக்கிறது. இந்தியாவின் கலாசார அடையாளத்தை வடிவமைப்பதில் சைவப் பாரம்பரியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தக் கலாசார வளா்ச்சியில் சோழப் பேரரசா்கள் முக்கியப் பங்காற்றினா்.
இன்று இந்தியா வளா்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறது. நவீன இந்தியா அதன் வரலாற்றில் பெருமை கொள்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் நாடு அதன் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுகிறது. இங்கிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட பழங்காலச் சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட பழங்கால கலைப் பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, அவற்றில் 36 கலைப் பொருள்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவை. அவற்றில் நடராஜா், லிங்கோத்பவா், தட்சிணாமூா்த்தி, அா்த்தநாரீஸ்வரா், நந்திகேஸ்வரா், உமா பரமேஸ்வரி, பாா்வதி மற்றும் சம்பந்தா் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பாரம்பரியச் சிலைகள் மீண்டும் இந்த நிலத்தை அலங்கரிக்கின்றன.
சிவ-சக்தி பகுதி: இந்தியாவின் பாரம்பரியமும், சைவ தத்துவத்தின் தாக்கமும் இனி அதன் புவியியல் எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா திகழ்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவ-சக்தி’ என்று பெயரிடப்பட்டது, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது’ என்றாா் பிரதமா் மோடி.