சாந்தோம் சாலையில் இன்று முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்து
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும், நெரிசல் மிகுந்த வேளையில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாந்தோம் காரணீஸ்வரா் கோயில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஒருவழிப் பாதையாக அப்பகுதி கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இதனால் வாகனங்கள் லூப் சாலையில் திருப்பிவிடப்பட்டன. தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் சாந்தோம் நெடுஞ்சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை (மே 9) முதல் அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்படி, நெரிசல் இல்லாத வேளையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
நெரிசல் மிகுந்த நேரமான காலை 7.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஒருவழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.