சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கணவன், மனைவி, மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், மருதப்பட்டினம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அருள்பிரகாஷ் (28). இவரது மனைவி பெரியநாயகி (25), மகள் நிட்சயா (7). இவா்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனராம்.
நீா்முளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பெரியநாயகி, நிட்சயா இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருள்பிரகாஷ் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
