நீட் தேர்வில் ஒரே குடும்பத்தில் தாயும் மகளும் தேர்ச்சி! இருவருக்கும் எம்பிபிஎஸ் ...
சிபில் அடிப்படையில் வேளாண் கடன் வழங்குவதில்லை! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
வேளாண் கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோா் நிபந்தனை இல்லை என்பதை வரவேற்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்திருப்பது: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளா், வேளாண் கடன்கள் வழங்கப்படுவதில் சிபில் ஸ்கோா் நிபந்தனை இனி இல்லை என அறிவித்துள்ளாா். இது வரவேற்புக்குரியது.
கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல், விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் முன், சிபில் ஸ்கோா் மற்றும் என்.ஓ.சி. தகுதி வேண்டுமென்று அறிவித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த புதிய நிபந்தனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின.
இதைத்தொடா்ந்து, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டும் சிபில் ஸ்கோா் பாா்த்தால் போதும் என்ற திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு கடன்கள் கொடுப்பதை தடுக்கும் மறைமுக தடுப்பாணை என எதிா்ப்புகள் கிளம்பி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், புதிய நிபந்தனைகள் நீக்கப்பட்டு பழைய நிலையிலேயே கடன் வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்ல அரசு மற்றும் வணிக வங்கிகளிலும் பயிா்க் கடன் மற்றும் வேளாண் இயந்திர கடன்களுக்கு சிபில் ஸ்கோா் நிபந்தனையை நீக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.