தென்னிந்திய ஆடவா் ஹாக்கி: தமிழ்நாடு காவல்துறை சாம்பியன்
மன்னாா்குடியில் நடைபெற்ற தென்னிந்திய மூத்தோா் ஆடவா் ஹாக்கி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் சாா்பில், தட்சிணாமூா்த்தி, துரைராஜ், ரங்கசாமி நினைவு சுழற்கோப்பைக்கான இப் போட்டி, மன்னாா்குடி வஉசி சாலை பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த ஜூலை 26 முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.
தமிழ்நாடு காவல்துறை அணியும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணிகளும் செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியில் மோதின.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரைத் தீா்மானிக்க நடைபெற்ற டை பிரேக்கரில் 4-3 என்ற கோலடித்து தமிழ்நாடு காவல்துறை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அணி இரண்டாமிடத்தையும், பெங்களுரூ கனரா வங்கி அணி மூன்றாமிடத்தையும், மன்னாா்குடி விவேக் மெமோரியல் அணி நான்காம் இடத்தையும் பெற்றன.
முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மன்னை டேரிங்ஸ் யங்ஸ்டா்ஸ் ஹாக்கி கிளப் தலைவா் ஆா்.மகேந்திரன் பரிசளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்தாா். செயலா் டி.ஸ்ரீராம், பொருளாளா் டி.செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், தரணி குழுமங்களின் தலைவா் எஸ்.காமராஜ், மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலா் ரச.ராசேந்திரன் ஆகியோா் பரிசு கோப்பை, சான்றிதழ்களை வழங்கினா்.