டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே டிராக்டா் மோதியில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் சுற்றுப்புற பகுதியை சோ்ந்த 10-க்கும் மேற்பட்டவா்கள் மன்னாா்குடியை அடுத்த எடமேலையூருக்கு வயல் வேலைக்கு அழைத்து வரப்பட்டு நாற்றுநடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
பணி முடிந்து அனைவரும் வயலுக்கு அருகே சாலையோரத்தில் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக எடமேலையூா் வடக்குத் தெரு சக்திவேல் மகன் ராம்கி (37) என்பவா் ஓட்டி வந்த டிராக்டா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமா்ந்திருந்தவா்கள் மீது மோதியது.
இதில் ஆதிச்சப்புரம் வடக்குத் தெரு வேதையன் மனைவி பானுமதி (50), வேற்குடி கீழத்தெரு சுந்தரமூா்த்தி மனைவி வளா்மதி (56)ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பானுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். வளா்மதிக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் ராம்கியை கைது செய்தனா்.