ராக்கெட் தொழில் நுட்ப மையம்: ஒப்பந்தப் புள்ளி கோரியது டிட்கோ
சிறகு இல்லாத சிறகிலிநாதர்!
ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி கீழே வீழ்த்திச் சென்றான். குற்றுயிரான சடாயு ராமனின் மடியில் கிடந்து சேதிகள் சொல்லி நிறைவை அடைந்தது. தன் தந்தைக்கு செய்தது போன்று, ராமன் பிதுர்க்கடன் செய்தார். சடாயுவின் ஆன்மா பரிபூரணமடைந்து மகாலிங்கத் திருமேனி தாங்கியது. சிறகு இல்லாததால் "சிறகிலிநாதர்' என அழைக்கப்பட்டது.
ஒருகாலத்தில் இப்பகுதி பஞ்சமாக, வறட்சி மிகுந்த நிலையில் மக்கள் பிரார்த்திக்க பொன் பொழிந்ததால் "சொர்ணமூர்த்தி' என அழைக்கப்பட்டார் என்பதும் மரபு. இதன் நினைவாக செம்பொன்மாரி என்ற கிராமமும் இப்பகுதியில் உள்ளது. அம்பாள் பெரியநாயகி என்ற பிருஹத் நாயகி. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட கோயிலாகும்.
கிழக்கு ராஜ வீதி நடுவில் அமைந்த கிழக்கு நோக்கிய இராஜகோபுரம், குடவரை வாயில் கடந்த கொடிமர மண்டபமும், தென்புறம் நீண்ட உயர் மண்டபமும் உள்ளது. வடபுறம் நீண்ட உயர்ந்த மண்டபத்தில் அம்பாள் கருவறையும், அர்த்த மண்டப தளியும், பள்ளியறையும் உள்ளன. இதனைக் கடந்து உட்புகும்போது, பழைய இராஜகோபுர குடவரை வாயிலும், உட்பிரகாரமும் உள்ளன. வடபுறத்தில் கூத்தப் பெருமாளுக்கு கோட்டமும், தென்புறம் அனுக்கை விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், கன்னிமூலகணபதி, மகாலெட்சுமி, முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. கோயிலில் ஆனிப் பெருவிழா ஜூன் 30}இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 8}இல் தேரோட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 2.கி.மீ. தொலைவில் கண்டதேவி ஊர் அமைந்துள்ளது.
}பொ.ஜெயச்சந்திரன்