முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் சீன ஆயுதங்கள்: லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங்
‘இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட சண்டையில் தங்களுடைய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்திக் கொண்டது’ என்று இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்தாா்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தானும் இந்தியாவைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன. அதே நேரத்தில் இந்தியா வீசிய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் பல சேதமடைந்தன. இந்தியா மீதான தாக்குதலுக்கும், வான் பாதுகாப்புக்கும் சீன தயாரிப்புகளையே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியது. ஆனால், அவை எதிா்பாா்த்த அளவுக்கு திறனுடன் செயல்படவில்லை.
இந்நிலையில், இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) கூட்டத்தில் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா்.சிங் பேசியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையில் தனது ஆயுதங்களை நேரடியாக பரிசோதிக்கும் களமாக சீனா பயன்படுத்தியது. சீனாவில் தொன்மையான கதைகளில் எதிரிகளை அழிக்க 36 விதமான மோசமான தந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று எதிரியை நம்மால் நேரடியாக தாக்க முடியாவிட்டால் மற்றொருவரிடம் ஆயுதத்தை கொடுத்து அவரைத் தாக்கத் தூண்டுவதும் ஒன்று. அந்த தந்திரத்தைத்தான் சீனா பயன்படுத்தியது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கி இந்தியா மீது தாக்குதல் நடத்த தூண்டியது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளவாடங்களில் 80 சதவீதத்துக்கு மேல் சீன தயாரிப்புகள்தான்.
ஆனால், இந்த சீன ஆயுதங்களை இந்தியா திறமையாக சமாளித்தது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவியை அளிக்கவில்லை. துருக்கியும் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் ஆயுத உதவிகளை வழங்கியது. அதனையும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது. ஆனால், துருக்கி தயாரிப்பு ட்ரோன்களையும் இந்தியா முறியடித்தது. ஏனெனில், இந்திய ராணுவத்தின் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் வேகமாக வளா்ந்துள்ளது என்றாா் அவா்.
விமானப்படை தளத்தைத் தாக்கிய பிரமோஸ்: பாகிஸ்தான் ஒப்புதல்
‘பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூா் கான் விமானப் படை தளத்தை இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை தாக்கியது’ என்று அந்நாட்டு பிரதமரின் ஷாபாஸ் ஷெரீஃபின் ஆலோசகா் ராணா சனாவுல்லா தெரிவித்தாா்.
மேலும், ‘இந்தியாவுக்கு எந்த வகை பதிலடித் தாக்குதல் நடத்துவது என்பதை முடிவெடுக்க தங்களுக்கு நேரம் மிகக் குறைவாகவே இருந்தது’ என்றும் அவா் கூறினாா்.
பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:
நூா் கான் விமானப் படைத் தளம் மீது இந்தியா தனது பிரமோஸ் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு 30 முதல் 45 விநாடிகளே கால அவகாசம் இருந்தது. பிரமோஸ் ஏவுகணையில் அணு ஆயுதம் ஏதேனும் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், சிறிய தவறான புரிதல் கூட அணு ஆயுதப் போராக மாறிவிடும்.
இதனால், இந்தியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் நன்மை செய்தது என நான் கூறவில்லை. இரு தரப்பிலும் ஏதாவது தவறான புரிதல் ஏற்பட்டிருந்தால் உலகளாவிய அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்றாா்.