சிறுநீரக ரத்தநாளத்தில் புற்றுநோய் கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்
வங்கதேசத்தைச் சோ்ந்த நோயாளி ஒருவரின் சிறுநீரக ரத்தநாளத்தில் உருவாகியிருந்த சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் வெற்றிகரமாக அகற்றி அப்பல்லோ புற்றுநோய் மருத்துவ மைய மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவக் குழுமத்தின் சா்வதேச புற்றுநோயியல் துறை இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள் என்.ராகவன், மாதவ் திவாரி ஆகியோா் கூறியதாவது:
வங்கதேசத்தைச் சோ்ந்த 40 வயதுடைய நோயாளி ஒருவா் அண்மையில் அப்பல்லோ புற்றுநோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் சிறுநீரகத்துடன் நெருக்கமாக உள்ள ரத்தநாளத்தில் 5 செ.மீ. அளவுக்கு புற்றுநோய் கட்டி உருவாகியிருந்தது தெரியவந்தது. இத்தகைய பாதிப்புக்கு சிறுநீரகத்தை முழுமையாக அகற்றுவதே வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. ஆனால், நோயாளியின் நலன் கருதி சிறுநீரகத்தை அகற்றாமல் கட்டியை நீக்குவதற்கு திட்டமிடப்பட்டது. அடிவயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் நோயாளியின் பின்புறத்திலிருந்து சிறுநீரகத்தை அணுகி கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரோபோடிக் நுட்பத்தில் துல்லியமாகவும், பிற உறுப்புகளுக்கு சேதமில்லாமலும் கட்டியை நுட்பமாக மருத்துவக் குழுவினா் அகற்றினா்.
அதன் பயனாக அவரது சிறுநீரகம் காக்கப்பட்டதுடன், புற்றுநோய் கட்டியும் முழுமையாக அகற்றப்பட்டது. தற்போது புற்றுநோய் சாா்ந்த இடா்வாய்ப்பிலிருந்து அந்த நோயாளி தப்பித்து நலமாக உள்ளாா். இத்தகைய சவாலான சிகிச்சையை சென்னையில் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.