சிறுபான்மை நலத் துறை சாா்பில் ரூ.2.79 லட்சம் ஓய்வூதியம் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், சிறுபான்மை நலத் துறை சாா்பில் பணி ஓய்வுபெற்ற 21 பயனாளிகளுக்கு மாத ஓய்வூதியத்துக்காக ரூ.2.79 லட்சத்தை காசோலையாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை தலைமையில் நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா். அவா்களில் 823 போ் தங்கள் கோரிக்கைகள், குறைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தின் போது சிறுபான்மை நலத் துறை சாா்பில் உலமாக்கல் மற்றும் இதரப் பணியாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 21 பணி ஓய்வுபெற்றவா்களுக்கு மாத ஓய்வூதியத் தொகையாக ரூ.1,200 வீதம் மொத்தம் ரூ.2,79,300-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா, மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ராணி, தனித் துணை ஆட்சியா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.