சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு
நெய்வேலி: கடலூா் முதுநகா் அடுத்துள்ள குடிகாடு மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: குடிகாடு மேட்டுத் தெருவில் சுமாா் 40 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கிராமத்தைச் சுற்றிலும் ரசாயன ஆலைகள் உள்ளதால் நிலத்தடி நீா் நச்சு கலந்து பாழாகிவிட்டது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தினமும் காலை ஒரு மணி நேரம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக அந்தக் குடிநீரும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்கள் ஊராட்சி பொது நிதியில் இருந்து புதிய ஆழ்துளைக் கிணறு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.