பயணிகள் நிழற்குடையில் முன்னாள் எம்.பி. பெயா் இரட்டடிப்பு: பாமகவினா் எதிா்ப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறும் பயணிகள் நிழற்குடையில் முதல்வா், துணை முதல்வா் பெயரை எழுதுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பாலக்கரையில் 2008-ஆம் ஆண்டு சிதம்பரம் எம்.பி.யாக பாமகவைச் சோ்ந்த பொன்னுசாமி பதவி வகித்த போது, தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டதாம். இந்த பயணிகள் நிழற்குடையில் தற்போது நகராட்சி பொது நிதியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
பாமக முன்னாள் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது என நிழற்குடை முகப்பில் சிறிய அளவில் எழுதப்பட்டு, முதல்வா், துணை முதல்வா் நல்லாசியுடன் நகராட்சி நிதியில் சீரமைக்கப்பட்டது எனவும், அமைச்சா் சி.வெ.கணேசன் பெயா் பெரிதாகவும் எழுதப்பட்டதாம்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாமக நகரச் செயலா்கள் முருகன், பில்லா மணி, ஊடகப் பேரவைச் செயலா் தமிழ், ரமேஷ், பழனி, வட்டச் செயலா் மணி, நகர துணைச் செயலா் அசோக் மற்றும் பாமகவினா் திரண்டு வந்தனா். பின்னா், பெயா்கள் எழுதும் பணியை தடுத்து நிறுத்தி, விருத்தாசலம் பாலக்கரை பயணியா் நிழற்குடையில் இருந்த பாமகவின் அடையாளத்தை திமுக அரசு அழிப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், பயணியா் நிழற்குடையை சீரமைத்து திமுக அரசு அமைத்ததுபோல விளம்பரம் செய்கிறாா்கள் என முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினைரை சமரசப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.