சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்
தூத்துக்குடி புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
புதியம்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணனை (25), புதியம்புத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றவாளி மாயகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீா்ப்பு வழங்கினாா்.