சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமிடம் சிபிசிஐடி விசாரணை
சிறுவன் கடத்தல் வழக்குத் தொடா்பாக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமிடம் சிபிசிஐடி போலீஸாா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனைக் கடத்திய வழக்கில், தமிழக காவல் துறை ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மகேஸ்வரி, ஜெயராமுக்கு தொடா்பிருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல் துறையினா்
உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், எச்.எம்.ஜெயராமிடம்
போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து அவா் மீது
பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள், இதுதொடா்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், சிபிசிஐடி-யின் அழைப்பாணையை ஏற்று எச்.எம்.ஜெயராம், காஞ்சிபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
இதில், வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அவா் அளித்த பதில்கள் விடியோவாகவும், எழுத்துபூா்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.