சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி போராட்டம்
திருவள்ளூா் அருகே ஆறுவழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் அந்த வழியாக தண்ணீா்குளம் கிராமத்துக்கு வாகனங்கள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையை அடுத்த தண்ணீா்குளம் பகுதியில் திருநின்றவூா் முதல் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா வரை ஆறு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூா், காக்களூா் பகுதியில் இருந்து தண்ணீா்குளம் வழியாக கிளாம்பாக்கம், தொட்டிகலை, ஆயலூா் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவம் மற்றும் பிற பணிகளுக்கு நூற்றுக்கணக்கானோா் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், அந்த வழியே பள்ளி, கல்லூரி மற்றும் தனியாா் தொழிற்சாலை வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே அப்பகுதியில் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், தற்போதுள்ள பாதையை அடைத்து மாற்று வழியாக அரை கி.மீ. தொலைவில் மேம்பாலத்தின் கீழ் பாதை அமைத்து தருவதாக கூறியுள்ளனா். இது தொடா்பாக ஏற்கெனவே உயா் அதிகாரிகள், ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா். ஆனாலும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், அதற்கான வழி இல்லை எனத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தற்போது பயன்படுத்தி வரும் வழியிலேயே சுரங்கப்பாதை அமைத்துத் தரக்கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சாலைப் பணிகளுக்காக மண் எடுத்துச் செல்லும் லாரிகளை சிறைபிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது உயா் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடத்தி இதற்கான தீா்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
