சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு
கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஜூலை 16-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
48 நாள் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, கணபதி ஹோமம், சுப்பிரமணிய மூலமந்திர ஹோமம், கலச புறப்பாடு, புன்யாவாஜனம், நவக்கிரக ஹோமம், முருக ஸுக்தம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.