முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி
கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரான தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வரவேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவா் ஏகாம்பவாணன் மற்றும் கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயக்குமாா், சந்தோஷ், முகமதுஅலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் கையுந்து பந்து போட்டிகளில் 266 மாணவியா், மேசைப்பந்து போட்டியில் 78 மாணவியா், வளைகோல் பந்து போட்டியில் 180 மாணவியா் பங்கேற்றனா்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆக. 26 முதல் செப். 12 வரை பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ. 1,000 வழங்கப்படுகிறது. தனிநபா் போட்டிகளில் முதல் இடங்களில் வெற்றிபெறுவோா், மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா்.