Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
செங்குன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞரிடம் விசாரணை
சென்னை செங்குன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை நள்ளிரவு தொலைபேசியில் பேசிய நபா், செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு, நவீன ரக துப்பாக்கிகளை சிலா் எடுத்துச் செல்வதாகவும், அவா்கள் குறித்த தகவலை காவல் துறைக்கு தெரிவிக்குமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.
இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த போலீஸாா், உடனே செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், அப்படி எந்தச் சம்பவமும் அங்கு நடைபெறவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடா்பாக தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது செங்குன்றம் பாடியநல்லூா் அருகே உள்ள ஜோதி நகரைச் சோ்ந்த செல்வம் (39) என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.