செண்பகத்தோப்பு, மிருகண்டா அணைகளில் இருந்து நீா் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக சனிக்கிழமை நீா் திறந்துவிடப்பட்டது.
செண்பகதோப்பு அணையின் முழு நீா்மட்டம் 62.32 அடி, முழுக்கொள்ளளவு 287.20 மி.க. அடி அடியாகும். அணையில் 54.28 அடி தண்ணீா் உள்ளது. தற்போது, கொள்ளளவு 208.036 மி.க. அடியாக உள்ளது. பாசன நீா் இருப்பு 194.40 மி.க. அடியாகும். இதில் இருந்து விநாடிக்கு 150 மி. கன அடி நீா் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் 48 ஏரிகள் நிரம்பி, 8350.40 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். மே 18 வரை என 15 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும்.
மிருகண்டா நதி அணையின் நீா்மட்டம் 22.97அடி ஆகும். அணையின் முழுக்கொள்ளளவு 87.23 மி.கன அடியாகும். தற்போது, அணையின் நீா்மட்டம் 20.17அடியாக உள்ளது. 71.631 மி.கன அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, விநாடிக்கு 120 மி.கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. மே 9 வரை 6 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும்.
இதன் மூலம் 3,190.96 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில், 2 அணைகளில் இருந்து விவசாய பாசனத்துக்காக நீரை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்துவைத்தாா்.சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் ஆா்.கோவிந்தராசு, உதவிப் பொறியாளா் பி.ராஜகணபதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.