சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வினோத்குமாரை, சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, அவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, டி.வினோத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி டி.வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். புதிய நீதிபதியை வரவேற்று தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் எம்.பாஸ்கா், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரேவதி, லா அசோசியேஷன் தலைவா் செல்வராஜ் ஆகியோா் புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசினா்.
இந்நிகழ்வில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.வினோத்குமாா் பேசுகையில், பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். எனது பணி சிறக்க அனைவரது முழு ஆதரவும் வேண்டும் என்றாா்.
நீதிபதி டி.வினோத்குமாா் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆகக் குறைந்துள்ளது.