சென்னை ஐசிஎஃப்-இல் 640 வந்தே பாரத் பெட்டிகள் தயாரிப்பு: மாநிலங்களவையில் தகவல்
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த மூன்று நிதியாண்டுகளில் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் எம்.பி. விக்ரஜித் சிங் எழுப்பிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
சென்னை ஐசிஎஃப்-இல் கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், கபுா்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஆா்சிஎஃப்) 300 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆா்சிஎஃப்-இல் கடந்த 3 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மொத்த ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5,414 என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் உணவு வசதி: வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவின்போது உணவு சேவையை தோ்வு செய்யாத பயணிகள், பயணத்தின்போது கட்டணம் செலுத்தி உணவு வாங்கிக் கொள்ளலாம் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, ஐஆா்சிடிசி தலைவருக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் முன்பதிவின்போது உணவு வசதியை தோ்வு செய்யாமல், ரயில் பயணத்தின்போது கட்டணம் செலுத்தி உணவு வாங்க விரும்பும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்று ஏராளமான புகாா்கள் எழுந்தன. இதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.