சென்னை: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை; நாடகமாடிய பக்கத்து வீட்டுப் பணிப்பெண் சிக்கியது எப்படி?
சென்னை மயிலாப்பூர், தெற்கு தெரு, கேசவபெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ்வரி (81). இவர் நேற்று (26.5.2025) மாலை வீட்டிலிருந்தபோது பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இந்திரா, ராஜேஷ்வரியின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
பின்னர் தாகமாக இருக்கிறது எனக் கூறி ராஜேஷ்வரியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார் இந்திரா. உடனே ராஜேஷ்வரி, சமையலறைக்குச் சென்றபோது பின்னாலேயே இந்திராவும் வந்திருக்கிறார்.
இதையடுத்து ராஜேஷ்வரி அணிந்திருந்த செயின், கம்மல், வளையல் என 10.5 சவரன் தங்க நகைகளைப் பறித்திருக்கிறார் இந்திரா.
அப்போது மூதாட்டி ராஜேஷ்வரி, தன்னால் முடிந்தளவுக்கு இந்திராவுடன் போராடியிருக்கிறார். அதனால், ஆத்திரமடைந்த இந்திரா, சமையலறையிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து குத்திவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
இந்தச் சமயத்தில் புத்திசாலித்தனமாக ராஜேஷ்வரி, 'நாராயணா... நாராயணா...' எனச் சத்தம் போட்டிருக்கிறார். உடனே சத்தம் போட்டால் குத்திவிடுவேன் என ராஜேஷ்வரியை இந்திரா பயமுறுத்தியிருக்கிறார்.

மூதாட்டி ராஜேஷ்வரியின் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் தன்னுடைய சகோதரருடன் அங்கு வந்திருக்கிறார்.
அப்போது ராஜேஷ்வரியின் கழுத்தைக் காலால் மிதித்தபடி கத்திக்கோலுடன் இந்திரா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
அதோடு பக்கத்து வீட்டுப் பெண் துணிச்சலுடன் போராடி இந்திராவை மடக்கிப் பிடித்தார். அப்போது இந்திராவும் நல்லவர் போல, 'யாரோ மூதாட்டியைத் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றுவிட்டார்கள். சத்தம் கேட்டு நான் காப்பாற்ற வந்தேன்' என நடித்திருக்கிறார்.
இந்த களேபரத்தில் மூதாட்டி மயங்கி விட்டார். இதையடுத்து பக்கத்து வீட்டுப் பெண் மற்றும் அங்கிருந்தவர்கள் மூதாட்டி ராஜேஷ்வரியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர். மயக்கம் தெளிந்ததும் மூதாட்டி ராஜேஷ்வரியிடம் போலீஸார் என்ன நடந்தது என விசாரித்தனர்.
அப்போது மூதாட்டி, தன்னிடம் தங்க நகைகளைப் பறித்தது இந்திராதான் என விவரமாகக் கூறினார். இதையடுத்து இந்திராவை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் சோதனை நடத்தியபோது நகைகள் இல்லை. அதனால் பெண் போலீஸாரின் உதவியோடு அவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, பாவாடை நாடாவுக்குள் தங்க நகைகளை இந்திரா மறைத்து வைத்திருந்ததைப் பெண் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இவர் அரியலூர் மாவட்டம், கோடான்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விசாரணைக்குப் பிறகு இந்திராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``மூதாட்டி ராஜேஷ்வரி குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு இந்திரா வேலைக்காகச் சேர்ந்திருக்கிறார்.
ராஜேஷ்வரியின் வீட்டுக்கு வரும் இந்திரா, அவரோடு பேசி பழகி வந்திருக்கிறார். அதனால் ராஜேஷ்வரியின் குடும்பச் சூழல் குறித்த தகவல் இந்திராவுக்குத் தெரியவந்திருக்கிறது.
பெரும்பாலும் வீட்டில் தனியாக ராஜேஷ்வரி இருப்பதைக் கவனித்த இந்திராவுக்கு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மீது ஆசை ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் சம்பவத்தன்று தனியாக இருந்த ராஜேஷ்வரியிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவரைக் கொடூரமாகத் தாக்கி தங்க நகைகளைப் பறித்திருக்கிறார் இந்திரா.
அப்போது ராஜேஷ்வரி, நாராயணா, நாராயணா எனச் சத்தம் போட்டதையடுத்து அருகில் வசிக்கும் பெண் ஒருவர் இந்திராவைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தார். இந்திராவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb