மனநிலை பாதித்தவருக்கு மருந்து கடையில் பணியா? - பாட்டி கேள்வி; பாலியல் புகாரில் தப்பியவர் கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகில் இருக்கிறது ஜகதீஷ்புரா. கடந்த 18-ம் தேதி இந்தப் பகுதியில் இருக்கும் கோயில் அருகில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனார்.
இதை அறிந்து பயந்த சிறுமியின் பாட்டி கோயிலுக்குள் சென்று தேடியிருக்கிறார். அப்போது கோயிலுக்குள்ளிலிருந்து ஒருவர் வெளியே ஓடினார். சிறுமியின் ஆடைகள் கலைந்து, தாக்கப்பட்டு தரையில் கிடந்தார். உடனே பதறிய சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சிறுமையை மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியிருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆனால், மறுநாள் கைது செய்யப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி காவல்துறை அதிகாரிகள் அவரை விடுவித்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறுமி கோயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் காட்சி கோயிலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
அந்தக் காட்சிகள் கடந்த 26-ம் தேதி வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி, ``என் பேத்தியை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பவித்ரா என்கிற பம்மி. அவன் மனநிலை சரியில்லாதவன் அல்ல என்பது எங்களுக்கு தெரியும். அவன் மருந்துக்கடையில் வேலைபார்த்து வருகிறான்.

மருந்துக்கடையில் வேலைபார்ப்பவன் எப்படி மனநிலை சரியில்லாதவனாக இருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பிருந்தார். சிறுமியின் பாட்டியின் வீடியோவும், கோயிலின் சிசிடிவி காட்சிகளும் சேர்ந்து இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறை பவித்ரா என்ற பம்மியை மீண்டும் கைது செய்துள்ளது.