சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு தீா்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி கால்நடை துறை சாா்பில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து பராமரிக்கப்படுகின்றன. மேலும், பிடிபடும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாடுகளை பராமரிக்க போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மாட்டின் உரிமையாளா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால், மாடுகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைப்பது, சாலையில் திரிய விடுவது குறையும் எனத் தெரிவித்தனா்.
அதன்பேரில், சென்னையில் மண்டலத்துக்கு ஒரு மாட்டுத் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அவற்றில் மாடுகள் பராமரிப்பதுடன், மாட்டின் உரிமையாளா்கள் தேவைப்படும்போது மாட்டை பாா்க்கவும் அனுமதிக்கப்படுவா்.
தற்போது, பிடிக்கப்படும் மாடுகள் பெரம்பூா் மற்றும் புதுப்பேட்டையில் உள்ள தொழுவங்களில் பராமரிக்கப்படுகின்றன. மேற்கொண்டு 13 புதிய மாட்டுத் தொழுவங்கள் கட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.