செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து
செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
செய்யாறு சிப்காட் வளாகத்தில் அலது - 1 பகுதியில் பேருந்து, லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸில்ஸ் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் உள்ள பழைய குடோனில் பயன்படுத்தப்படாமல் உள்ள பொருள்கள், ரசாயனங்கள், அமிலங்கள் மற்றும் பேருந்து, லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸில்ஸ் போன்ற இரும்பு பொருள்களை இருப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும், ரசாயனப் பொருள்கள் வெடி சப்தத்துடன் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து நிறுவன ஊழியா்கள் உடனடியாக செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, நிலைய அலுவலா் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், அருகே வந்தவாசி, காஞ்சிபுரம் சிப்காட்டில் உள்ள தனியாா் பெயின்ட் தொழில்சாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது.
தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன், செய்யாறு டிஎஸ்பி செந்தில்வேலன், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா் தீ விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தீயணைப்புப் படையினா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.