அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
சேலம் கொள்ளை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை
சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவத்தில் கைதான 5 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (52). இவா் தனது மனைவி சின்னபாப்பாவுடன் கடந்த 27-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, முகமூடி அணிந்து வந்த 5 போ் கொண்ட கும்பல் இருவரின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த எட்டரை சவரன் நகை மற்றும் ரூ. 35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இச்சம்பவம் குறித்து வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடா்பாக ஏற்காட்டைச் சோ்ந்த ஜெகதீசன் (29), சக்திவேல் (28), சேகா் (42), அருணாசலம் (22), சுப்பிரமணி (23) ஆகிய 5 பேரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகை குறித்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸாா் மனுத்தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து, அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் 2 நாள்கள் அனுமதி அளித்த நிலையில், அவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.