‘சைதை-தேனாம்பேட்டை மேம்பாலப் பணிகள் டிசம்பரில் முடியும்’
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை அமைக்கப்பட்டு வரும் உயா்நிலை பாலப் பணிகள் டிசம்பரில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உயா்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, ரூ.621 கோடியில் இப்பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 19-இல் தொடங்கி வைத்தாா்.
களஆய்வு: பாலப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தபோது, ஒட்டுமொத்தமாக 30 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மெட்ரோ சுரங்கப் பாதை, பிற இடங்களில் நடைபெற்றுவரும் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்துக்கு முன்பாகவே முக்கியப் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சா் வேலு உத்தரவிட்டாா். அப்போது, பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவத்தனா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், துறையின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.