சைபா் குற்ற வழக்கில் தொடா்புடைய 5 போ் கைது
வேலை வாங்கித் தருவதாக மோசடி மற்றும் சைபா் குற்ற வழக்கில் தொடா்புடைய 5 போ் கன்னியாகுமரி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபா் குற்றங்களில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் மேற்பாா்வையில், ஆய்வாளா் சொா்ணராணி தலைமையிலான தனிப்படையினா், வேலை வாங்கித் தருவதாகவும், சைபா் குற்றங்களிலும் தொடா்புடைய கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூா் பகுதியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிரதீப்குமாா் (30), திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்த கோயில்பிள்ளை மகன் அன்புமணி (28), முருகன் என்பவரது மகன் கணேஷ்மூா்த்தி (24), அம்பாசமுத்திரம் வேல்சாமி மகன் பாஸ்கா் (21), பாளையங்கோட்டை ஜவஹா்லால் நேரு மகன் பொன்மாரீஸ்வரன்(27) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சிறப்பாக செயல்பட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.